டெல்லி : நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நடப்பாண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.
இதன் காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடப்பாண்டில் ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி வரை இரு அவைகளும் தொடர்ந்து நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி மீது பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த படியாக கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிதி சார்ந்த திட்டங்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக மக்களவை உள்ளிட்ட பொதுத் தேர்தல்களை ஒட்டி தாக்கல் செய்யப்படுகின்ற இடைக்கால பட்ஜெட்களில் புதிதாக வரி விதிப்புகள், அல்லது புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் பெரும்பாலும் இருக்காது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் 2024 - 2025 நிதி ஆண்டுக்கான 4 மாத செலவீனங்களை ஈடு செய்ய அரசு நாடாளுமன்றத்தில் அனுமதி கோரும்.
அதேநேரம் புதிய அரசாங்கம் உருவான பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது 4 மாதங்கள் காத்திருக்க முடியாத உடனடி பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான இந்த இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழிவுகள் தாக்கல் செய்யப்படலாம். அதேநேரம் கடந்த எட்டு காலாண்டாக தினசரி அத்தியாவசிய பொருட்களின் நுகர்வு மற்றும் விலை அதிகரித்து உள்ள நிலையில், அதன் மீதான விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
இதையும் படிங்க :பாரத் ஜோடோ நியாய யாத்திரா : ராகுல் காந்தி எங்கெல்லாம் எவ்வளவு நாட்கள் பயணம்? முழு தகவல் இங்கே!