கொச்சி:இந்திய அரசின் பாதுகாப்புத்துறையை தன்னிறைவு பெறச்செய்வதற்கும், நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இதன்மூலம் உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கக்கூடிய நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்திய விமானம் தாங்கி போர்ப்படை கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று (செப்- 2) கேரளாவில் நடந்தது. இதனையடுத்து இந்திய கடற்படையின் புதிய கொடியை மோடி வெளியிட்டார்.
புதிதாக வெளியிடப்பட்ட கொடியில் செயின்ட் ஜார்ஜ் சிலுவையை நீக்கி, சத்ரபதி சிவாஜியின் அரச முத்திரை பதிக்கப்பட்டது. இது குறித்து பேசிய மோடி, ‘புதிய கொடியின் மூலம் நாடு தனது காலனித்துவ காலத்தை உதறித் தள்ளிவிட்டது. இன்று வரை இந்திய கடற்படைக்கொடிகள் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தன. அது தற்போது சத்ரபதி சிவாஜியின் எண்ணத்தால் உருவாக்கப்பட்டிருந்த கொடியின் பரிணாமமாக புதிய கொடி உள்ளது' என்று அவர் கூறினார்.
விமானம் தாங்கி போர்க்கப்பலை மிதக்கும் விமானநிலையம், மிதக்கும் நகரம் என்று அவர் வர்ணித்தார். மேலும் அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கொண்டு 5,000 வீடுகளுக்கு ஒளியூட்ட முடியும் என்றும் கூறினார். இந்தப்போர்க்கப்பல் இந்தியாவின் திறமைக்கான சான்று. இது சிறப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் உள்ளது எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தியில் கப்பல்கள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க:'நாயகன் மீண்டும் வரார்...' வங்கதேச விடுதலையின் முக்கிய போர் வீரன் - ஐஏன்எஸ் விக்ராந்த் ஓர் அறிமுகம்