தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Budget 2022: பாதுகாப்புத்துறையில் தற்சார்பு, தனியார் முதலீட்டுக்கு முக்கியத்துவம் - பட்ஜெட் அறிவிப்பு செய்திகள்

2022ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு மற்றும் தனியார் பங்களிப்பை உறுதிப்படுத்த அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது என சஞ்ஜீப் கே பருவா தெரிவித்துள்ளார்.

சஞ்ஜீப் கே பருவா
சஞ்ஜீப் கே பருவா

By

Published : Feb 1, 2022, 5:27 PM IST

நாட்டின் பாதுகாப்புத்துறை சீனாவிடம் இருந்து பெரும் சவாலைச் சந்தித்துவருகிறது. இமயமலை, காரகோரம் ஆகிய பகுதிகளில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் சீனா எல்லைப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில், 2022ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு மற்றும் தனியார் பங்களிப்பை உறுதிப்படுத்த அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. தற்சார்பு மற்றும் தனியார் பங்களிப்பே பட்ஜெட்டின் அடிநாதமாக உள்ளது.

முதலில், பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதியை குறைக்க, 68 விழுக்காடு மூலதன செலவீனங்கள் இனி உள்நாட்டு கொள்முதலுக்கே செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பட்ஜெட்டில் இந்த அளவு 58 விழுக்காடாக இருந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறையில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முதலீடுகளில் நான்கில் ஒரு பங்கு தனியார், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

தனியார் துறையினர் பாதுகாப்பு தளத்தில் முன்னேறிய தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திவரும் நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும். மூன்றாவதாக, உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் குறைந்த செலவீனங்களுடன் பாதுகாப்புத்துறைக்கு தேவைக்கு ஏற்ப விரைவான தயாரிப்புகளை வழங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நான்காவதாக, அரசின் அமைப்புகளான டிஆர்டிஓ உள்ளிட்டவற்றுடன் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் SPV மாடலை அரசு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.4.78 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 9.9 விழுக்காடு அதிகமாகும்.

இந்த மொத்த பட்ஜெட் தொகையில், புதிய தளவாடங்கள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு ரூ.1.38 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.57 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இது 9.7 விழுக்காடு அதிகமாகும். மேலும், சம்பளம் மற்றும் பராமரிப்புக்கான செலவீனங்கள் ரூ.2.33 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு ரூ.1.19 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி என்ற முன்னெடுப்பு சிறப்பு வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.

தனியார் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமான திட்டங்களை இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ் பி சுக்லா வரவேற்றுள்ளார். இது ஆராய்ச்சித்துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் 2022: வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details