புஜ்: கவிதை எழுதுவது என்பது, ஒருவர் மற்றொருவருக்கு கற்றுக் கொடுக்கும் செயல் அல்ல. அது இயல்பாகவே மனதில் இருந்து வர வேண்டிய எண்ணோட்டம். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் அனுபவங்கள், இடத்துக்கேற்ற சூழல், விருப்பம், அவரவரின் சித்தாந்தம் ஆகியவை தான் கவிதைகளாகப் பிரதிபலிக்கின்றன.
ஆனால், கவிதை எழுத கற்பிக்க இந்தியாவில் ஒரு பள்ளி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆம். சுதந்திரத்துக்கு முன்பு வரை அந்தப் பள்ளி இருந்துள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் நகரை ஆட்சி செய்தவர், மகராவ் லக்பத்ஜி. கவிதை மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் சண்டசாஸ்திரம், ராசா சாஸ்திரம், பிங்கலா ஆகிய இலக்கியங்களை ஆழமாக கற்றவர். புகழ்பெற்ற கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் அவைக்கு வந்தால் அவர்களை கவுரவிக்க தவறியதில்லை. பல்வேறு பரிசுகளை வழங்கி அவர்களைப் பாராட்டினார்.
கவிதை மீது காதல் கொண்ட மன்னர் மகராவ் லக்பத்ஜி, வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் கட்ச் நகரில், 1752-ம் ஆண்டு கவிதைப் பள்ளியை நிறுவினார். மேலும் மாணவர்களுக்கான பல்வேறு வசதிகளையும் செய்து கொடுத்தார். மாணவர்கள் பள்ளியிலேயே தங்கி படிக்கும் வகையில், விடுதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார், மன்னர் மகராவ் லக்பத்ஜி. இதனால் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் தங்கிப் படித்தனர்.
கவிதை மட்டுமின்றி அதில் இடம்பெற வேண்டிய கருத்துகள், நகைச்சுவை, ஒலி, தரம் உள்ளிட்ட பல அம்சங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. உரைநடை குறித்த விரிவான பாடங்களும் எடுத்துரைக்கப்பட்டன. மன்னர் லக்பத்ஜியின் பதவிக்காலத்துக்குப் பிறகு, மகராவ் மதன்சிங்ஜி புதிய மன்னராக அரியணை ஏறினார். அவரும், கவிதைப்பள்ளியை முறையாகப் பராமரித்து வந்தார்.
இந்நிலையில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன்பின் பல்வேறு நகரங்களை ஆட்சி செய்து வந்த குறுநில மன்னர்கள், அந்தந்த நகரங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கத் தொடங்கினர். 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் கட்ச் இணைப்பு ஒப்பந்தத்தின்படி, கட்ச் நகரம் இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கவிதைப்பள்ளியின் நிலை மோசமானது. முறையாக நிதி ஒதுக்கப்படாததால் மாணவர்கள் அங்கு சேரவில்லை. தற்போது சிதிலமடைந்த கட்டடத்துடன் காட்சிப்பொருளாக உள்ளது.
இதுதொடர்பாக கவிதைப்பள்ளியின் கடைசி தாளாளர் சம்புதான்ஜி காட்வியின் மகன் புஷ்பதன் காத்வி கூறுகையில், "எனது தந்தை கட்ச் கவிதைப்பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்தார். அவரது நூற்றாண்டு விழா 2010ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். அப்போது இந்தப் பள்ளியை மீண்டும் திறக்க பல்வேறு கவிஞர்கள், அறிஞர்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் ஜாவேர்சந்த் மெகானி நாட்டுப்புற இலக்கிய மையம் திறக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கவிதைப்பள்ளிக்கு இன்று வரை நிதி ஒதுக்கப்படாமல் கேட்பாரற்று உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மகனை சித்திரவதை செய்து கை, கால்களை முறித்த கொடூர தந்தை!