நாட்டின் சூரிய மின் உற்பத்தி குறித்து அறிக்கையை மெர்காம் இந்தியா என்ற ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் வரை இந்தியாவில் புதிதாக 7.4 ஜிகாவாட் சோலார் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகமாகும். 2020ஆம் ஆண்டில் மொத்தமாக 1.73 ஜிகாவாட் சோலார் மின்சக்தி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
சந்தையின் சூழல் மிகவும் சவாலாக இருக்கும் காலத்தில்கூட இந்தாண்டு சோலார் மின் உற்பத்தி நல்ல ஏற்றம் கண்டுள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி, பண பரிவர்த்தனையில் சிக்கல், மூலப்பொருள் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளை சோலார் மின் உற்பத்தித்துறை சந்திப்பதாக ஆய்வு நிறுவனத்தின் சிஇஓ ராஜ் பிரபு தெரிவித்துள்ளார்.
கடந்த காலாண்டை விட நடப்பு காலாண்டில் சோலார் பொருள்களின் விலை 15 விழுக்காடு உயர்ந்துள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் சோலார் மின் உற்பத்தி அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகா உள்ளது. 2010 முதல் 2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் புதிதாக 143 சோலார் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சரியான வாகனக் காப்பீட்டுத் திட்டத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது?