கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி குறைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவும் குறைந்துள்ளது.
ஏற்றுமதி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 5.4 விழுக்காடாக சரிந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலியப் பொருள்கள், ரத்தினம், ஆபரணங்கள், பதனிட்ட தோல், மின்னணு பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி 26.23 பில்லியன் டாலராக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் 24.82 பில்லியன் டாலராக சரிந்து, ஏற்றுமதி விழுக்காடு 5.4 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஏற்றுமதி பொருள்களில், பெட்ரோலியப் பொருள்கள் 53.30 விழுக்காடும், முந்திரி 21.57 விழுக்காடும், காப்பி கொட்டைகள் 9.25 விழுக்காடும், பதனிட்ட தோல் 16.69 விழுக்காடும், மின்னணு சாதனங்கள் 9.40 விழுக்காடும், ஆபரணங்கள் 21.27 விழுக்காடும் சரிவை சந்தித்துள்ளன.
இதனால் கடந்த ஏப்ரல்-அக்டோபர் காலாண்டில், ஏற்றுமதி 19.05 விழுக்காடு குறைந்து, 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இறக்குமதி 36.28 விழுக்காடு குறைந்து, 182.29 அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் வணிக பற்றாக்குறை 8.78 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
அதேநேரத்தில், அரிசி, இரும்பு தாது, எண்ணெய் விதைகள், மருத்துவப்பொருள்கள், பஞ்சு, வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் அதிகரித்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.