டெல்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 35 லட்சத்துக்கும் அதிகமாக கரோனா தடுப்பு மருந்துகள் பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 10 கோடிக்கும் அதிகமான பயனாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா ஒரு நாளைக்கு மிக உயர்ந்த எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது. இன்று (ஏப்ரல் 11) காலை 7 மணி வரை மொத்தம் 15 லட்சத்து 17ஆயிரத்து 963 அமர்வுகள் மூலம் 10 கோடியே 15 லட்சத்து 95 ஆயிரத்து 147 தடுப்பூசி மருந்துகள் பயனாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 35 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 42,553 இடங்களில் 31லட்சத்து 22 ஆயிரத்து 109 பயனாளிகளுக்கு முதல் டோஸும், 3லட்சத்து 97ஆயிரத்து 878 பயனாளர்களுக்கு 2ஆவது டோஸும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.