தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நைஜீரியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்: எண்ணெய் நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார் - மத்திய அரசுக்கு கோரிக்கை!

நைஜீரியாவில் தாங்கள் பணியாற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் முறையாக சம்பளம், உணவு வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள இந்திய தொழிலாளர்கள், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nigeria issue
நைஜீரியா விவகாரம்

By

Published : May 10, 2023, 9:41 PM IST

கோபால்கஞ்ச்: நைஜீரியா நாட்டின் லேக்கி நகரில் 'தி டாங்கோட்' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை முழு செயல்பாட்டுக்கு வந்த பிறகு நாளொன்றுக்கு 6.50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எண்ணெய் டேங்குகள் அமைப்பதற்காக வதோதராவை சேர்ந்த செமிடெக் நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 150 தொழிலாளர்களை நைஜீரியாவுக்கு அழைத்து சென்றது.

இதைத் தொடர்ந்து பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நைஜீரியாவில் எண்ணெய் டேங்குகள் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிய நிறுவனம், கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு சரியான உணவை வழங்காத நிறுவனம், பாஸ்போர்ட்டையும் பறித்துவிட்டதாக இந்திய தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களை பணயக் கைதி போல் எண்ணெய் நிறுவனம் துன்புறுத்துவதாகவும், தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் பேசும் நபர் ஒருவர், "பிரதமர் மோடி, நாங்கள் இந்தியாவுக்கு வர விரும்புகிறோம். எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர நிறுவனம் மறுக்கிறது. எங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இது குறித்து பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் சவுத்ரி கூறும்போது, "நைஜீரிய நிறுவனத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களது குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். சிறை வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நைஜீரியாவில் சிக்கியுள்ள அனைத்து தொழிலாளர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என, எம்.பி அலோக் குமார் சுமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண் உளவாளியின் நிர்வாணப் படத்திற்காக பிரம்மோஸ், அக்னி ரகசியம் கசிவு - DRDO இயக்குநர் மீது குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details