தென்கிழக்கு மியான்மரில் உள்ள மியாவாடி நகரம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இப்பகுதியில் இன ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியா மற்றும் பல வெளிநாட்டு குடிமக்கள் அவர்களால் பிடிக்கப்பட்டு சட்டவிரோத வேலைக்களை செய்யும்படி துன்புறுத்தப்படுவதாக சமீபத்தில் காணொலி பரவியது.
மியாவாடி பகுதியில் சிக்கியுள்ள 30 க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களை தூதரகம் மீட்டுள்ளது. மீதமுள்ளவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மியான்மர் அரசுடன் இணைந்து இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது.
இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள பகுதி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய குடிமக்களை மீட்பதற்காக அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மியான்மரின் யங்கூனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததாவது,"மியான்மரின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள சில ஐடி நிறுவனங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியர்களை தகவல் தொழில்நுட்பத் துறை வேலை வாய்ப்பு என்ற பெயரில் தங்கள் ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் அழைத்து வந்திருக்கின்றனர்.
இந்தியத் தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைய வசதி செய்துள்ளனர். இது இந்தியத் தொழிலாளர்கள் பிரச்சினையில் சிக்குவதற்கு வழிவகுத்தது. இதனால் இந்திய குடிமக்கள் ஆட்சேர்ப்பு முகவர்கள், பணியிடம் குறித்து எச்சரிக்கையாக செயல்படும்படி கேட்டுக்கொண்டனர். வேலை விவரம், நிறுவனத்தின் விவரங்கள், இருப்பிடம், வேலைவாய்ப்பு ஒப்பந்தம் போன்றவைகளை வைத்திருப்பது நல்லது.
மியான்மரில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் காணொலி வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் மியான்மரில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர் முத்தரசன் கூறுகையில், மியான்மரில் இந்திய தொழிலாளர்கள் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது குடும்பங்கள் துயரத்தில் உள்ளனர். அவர்களை நாடு திரும்ப மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அவர்களுக்கு உள்நாட்டு வேலை வாய்ப்புகளை மத்திய அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருவதால் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடும் வேதனையை எதிர்கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.