ஹாங்சோவ்:19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.
அந்த வகையில் பெண்களுக்கான கிரிக்கெட் பேட்டி நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டில் பங்கேற்று உள்ள இந்திய மகளிர் அணி தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக ஹாங்காங் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று (செப். 20) நடைபெற்றம் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி மலேசிய மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மலேசிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய நேரப்படு காலை 8.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் மழை குறுக்கிட்டதால் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
5.4 ஓவர்களில் முடிவில் இந்தியா 60/1 என்ற நிலையில் இருந்த போது கேப்டன் ஸ்மிருதி மந்தனா (27 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமானது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஷாஃபாலி வர்மா 39 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸ்சர்கள் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
15 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியிம் ஜெமிமா ரோட்ரிக்ஸ்சா 6 பவுண்டரிகளுடன் 47 ரன்னும் மற்றும் ரிச்சா கோஷ் 7 ரன்னும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மலேசிய தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், மாஸ் எலிசா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசிய அணி களமிறங்கிய நிலையில், 1 ரன் எடுத்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்னும் 3 கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற வேண்டி உள்ள நிலையில், இந்திய மகளிர் அணி நேரடியாக அரை இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ராமோஜி பிலிம் சிட்டியில் ஐசிசி உலகக்கோப்பை!