லூதியானா: மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச்சேர்ந்த ரீனா சிப்பர் வர்மா என்ற 90 வயதான மூதாட்டி, தனது கணவர் மற்றும் மகளை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர் 1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது அவருக்கு 15 வயது. தனிமையில் வாழ்ந்துவரும் ரீனா வர்மா, பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக கிராமமான ராவல்பிண்டிக்குச்செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார். அவர் சுமார் 50 ஆண்டுகளாக விசா பெற முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரீனாவுக்கு பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரின் உதவியால் பாகிஸ்தானில் உள்ள தனது உறவினர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அப்போதும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு விசா கிடைக்கவில்லை.
இதையடுத்து கடந்த ஆண்டு மற்றொரு செய்தியாளரைச் சந்தித்துள்ளார். அந்த செய்தியாளர், இந்தியப் பிரிவினையின்போது இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி செய்பவர். அவரது அறிவுறுத்தலின்படி, தனது மூதாதையர்கள் வாழ்ந்த பூர்வீக கிராமத்துக்குச் செல்ல விரும்புவதாக வர்மா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.