பரேலி : பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணியிரிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுவின் கோமியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அய்வின் முடிவில் பசுவின் கோமியம் மனிதர்கள் நேரடியாக பயன்படுத்தத் தகுந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு நேரடி தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் எருமை மாட்டின் கோமியத்தில் அதிகளவிலான நுண்ணுயிரிகள் புலப்பட்டதாக ஆய்வில் முடிவில் தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது. நல்ல ஆரோக்கியமான பசு மற்றும் காளை மாடுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 14 வகையிலான தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணியிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பசு மற்றும் காளைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எஸ்செக்ரிசியா கோலி (Escherichia coli) எனப்படும் நுண்ணியிரிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நுண்ணியிரிகள் மனிதர்களின் உடல்களில் வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.