கர்நாடகா: ரஷ்யா-உக்ரைனுக்கு இடையேயான போரில் இன்று உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த கர்நாடக மாணவன் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் கார்கிவ் நகரில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று காலை உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. மாணவனின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தூதரகத்திடம் இந்திய மாணவர்களை மீட்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கார்கிவ் மற்றும் போர் நடக்கக்கூடிய இடங்களிலிருந்து இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாணவனின் குடும்பத்தார் பதற்றம்
உக்ரைனில் இறந்த இந்திய மாணவன் நவீன்(22) கர்நாடக மாநிலத்தின் செலகிரி மாவட்டத்தின் ஹவேரி கிராமத்தை சேர்ந்தவர். நவீன் முன்னதாக கர்நாடக மாநிலத்தின் ஸ்ரீலகோபா மற்றும் மைசூரில் படித்து வந்தார். நவீனின் தந்தை சேகரப்பா தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அரபு நாடுகள் மற்றும் மைசூரில் பணியாற்றி உள்ளார். பின்னதாக இவர்களது சொந்த ஊரான ஹவேரி கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.