புலிட்சர் விருது பெற்றவரும், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்தவருமான இந்திய புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் (41) ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் நடைபெற்ற தலிபான் தாக்குதலில் ஜூலை 16ஆம் தேதி கொல்லப்பட்டார்.
டெல்லியில் அடக்கம்
தொடர்ந்து, அவரது உடல் பத்திரமாக ஜூலை 18ஆம் தேதி டெல்லி கொண்டு வரப்பட்டு அவர் படித்த ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தலிபான் அறிவிப்பு
காந்தகார் மாவட்டத்தின் ஸ்பின் போட்லாக் என்ற பகுதியில் தானிஷ் சித்திக் செய்தி சேகரிக்கச் சென்றபோது உயிரிழந்த நிலையில், தானிஷின் மரணத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் முன்னதாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்க ஊடகம் அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்நிலையில், ”தானிஷ் துப்பாக்கிச் சூட்டில் வெறுமனே கொல்லப்படவில்லை, அவரது அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தெரிந்தே தலிபான்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்” என அமெரிக்க தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
’வாஷிங்டன் எக்ஸாமினர்’ எனும் இந்த பத்திரிகையின் அறிக்கையின்படி, ”ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான சண்டையை ஆவணப்படுத்த ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவக் குழுவுடன் தானிஷ் பயணித்தார். அப்போது சுங்கச் சாவடியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அவர்கள் சென்றபோது, தலிபான் தாக்குதலைத் தொடங்கவே தானிஷ் ஒரு சாராருடன் உள்ளூர் மசூதிக்குச் சென்றுள்ளார்.
அடையாளம் சரிபார்த்து கொலை
அங்கு அவருக்கு முதலுதவி கிடைத்துள்ளது. எனினும், ஒரு பத்திரிகையாளர் மசூதியில் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து தாலிபான்கள் மசூதியை தாக்கத் தொடங்கியதாகவும், அவரை தாலிபன்கள் உயிருடன் பிடித்ததாகவும், தொடர்ந்து அடையாளத்தை சரிபார்க்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டதாகவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தலிபான்கள் போர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், உலகளாவிய சமூகத்தின் மரபுகளை மதிக்கவில்லை என்றும் அந்நிறுவனம் காட்டமாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க:நீங்க தடுப்பூசி போட்டிருக்கீங்களா... பிவிஆர் அறிவித்த அதிரடி ஆஃபர்!