ஹூஸ்டன் :மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவி, மின்னல் தாக்கி மூளை சேதம் அடைந்த நிலையில், அவரை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் போராடி வருகின்றனர்.
சுஸ்ருன்யா கொடுரு என்ற இந்திய மாணவி அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில்நுட்பம் பயின்று உள்ளார். கல்லூரி படிப்பு முடிவடைந்த நிலையில், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக காத்திருந்து உள்ளார். கடந்த ஜூலை 4ஆம் தேதி, சான் ஜாசிண்டோ நினைவுச் சின்னத்தை சுற்றிப் பார்க்க சென்று உள்ளார்.
அப்போது திடீரென மின்னல் தாக்கி அருகில் இருந்த குளத்தில் சுஸ்ருன்யா தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு உடனடியாக குளத்தில் விழுந்த சுஸ்ருன்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மின்னல் தாக்கியதில் சுஸ்ருன்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மூளை சேதம் அடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மின்னல் பலமாக தாக்கியதால் சுஸ்ருன்யா சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சுயமாக சுஸ்ருன்யாவால் மூச்சு விட முடியாத சூழல் உருவாகி உள்ளதால் வென்டிலேட்டர் மூலம் அதாவது செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவர் மூச்சு சுவாசித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.