அமெரிக்கா :நியூயார்க் நகர காவல் துறையில் உயரிய பதவிகளில் ஒன்றான கேப்டன் பொறுப்புக்கு முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அமெரிக்க காவல் துறையில் உயரிய பதவி வகிக்கும் முதல் தெற்கு ஆசிய பெண் என்ற சாதனையை இந்திய வம்சாவளியான பிரிதிமா புல்லர் மல்டோனாடோ என்பவர் படைத்து உள்ளார்.
பிரதிமா, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். 9 வயது வரை பஞ்சாப்பில் வாழ்ந்து வந்தவர், பின்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வருகிறார். குயின்ஸ் நகரில் அதிகளவில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
பிரதிமாவின் தந்தை டாக்சி டிரைவராகப் பணியாற்றி வந்து உள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு பிரதிமாவின் தந்தை காலமானார். தந்தை இருந்தவரை குடும்பப் பொறுப்புகளின் பாரம் தெரியவராத நிலையில் அதன்பின் அவரது ஒத்துழைப்பை குடும்பத்திற்காக வழங்க வேண்டிய சூழல் உருவானதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பொது நலனில் அக்கறை கொண்டவராக காணப்படும் பிரதிமா, காவல் துறையில் இணைய முடிவு எடுத்து உள்ளார். நியூயார்க் நகர காவல் துறையில் காவலராகப் பணியில் சேர்ந்து உள்ளார். அயராத உழைப்பால் அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நியூயார்க் நகர காவல் துறையின் உயரிய பதவிகளில் ஒன்றான கேப்டன் பொறுப்பில் அங்கம் வகிக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியூயார்க் காவல்துறையில் உச்சபட்ச பொறுப்பு வகிக்கிறார் என்ற பெருமையை மட்டும் பிரதிமா பெறாமல் தெற்கு ஆசியாவிலேயே முதல் பெண்மணி என்ற அரிய சாதனையையும் படைத்து உள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்கா போலீசில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பிரதிமாவுக்கு, நான்கு வயதில் மகனும் உள்ளார்.
கணவர் மற்றும் குழந்தையை கவனிப்பது, அதேநேரம் காவல்துறை பணியையும் செம்மையாக கையாள்வது என பன்முகத்தன்மை கொண்டவராக பிரதிமா விளங்குகிறார். நியூயார்க் நகர காவல்துறையில் மொத்தம் 33 ஆயிரத்து 787 காவலர்கள் உள்ள நிலையில், அதில் 10. 5 சதவீதம் பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூர் மக்களுடன் பணியாற்றுவது போன்றதொரு சூழலே நிலவுவதாக பிரதிமா கூறுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்வது, சில சமயங்களில் உங்களை தவறான நபர்களையும் பாதுகாக்க வைக்கும் மற்றும் செய்யும் வேலைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது வாழ்க்கை பயணத்தின் ஒரு அங்கமாகும். அதற்காக நம் பணிகளை துறந்து செல்வது சரியல்ல, நாம் செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என நம்பிக்கை வார்த்தை உதிர்க்கிறார், பிரதிமா.
மேலும் காவல் துறை என்பது ஒரு பெரிய பொறுப்பு. எனது சமூகத்திற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும், தினமும் எங்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் நான் சிறந்த மற்றும் நேர்மறையான முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால், அவர்கள் பார்வையில் சட்டத்தின் மீதான கண்ணோட்டம் மறுபடும் என்று பிரதிமா கூறுகிறார்.
இதையும் படிங்க :ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்