டெல்லி: இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியாக இந்திய கடற்படை வியட்நாம் கடற்படையுடன் தென் சீனக் கடலில் பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்திவரும் நிலையில், இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாகஇந்திய கடற்படை தனது ட்வீட்டில், "இந்தியா-வியட்நாம் கடற்படைக்கு இடையேயான பாஸெக்ஸ் (PASSEX) ராணுவப் பயிற்சி டிசம்பர் 26, 2020 மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சி கடல்சார் இயங்குத்தன்மை, பரஸ்பர ராணுவப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது" என்று பதிவிட்டிருந்தது.
மத்திய வியட்நாமில் இந்தாண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 டன் நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். கில்டான் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.