டெல்லி: இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்களும், பயணம் மேற்கொள்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), “அதிகரித்து வரும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்தியில் இந்திய தூதர்கள் மற்றும் இந்திய மக்களை குறிவைத்து அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
கனடாவில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியான வெறுப்பு குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்தியர்களும், பயணம் மேற்கொள்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆலோசனையானது அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொண்டு கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இந்திய குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கனடாவில் இது போன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகள் மற்றும் இடங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது. இது இந்திய குடிமக்களை பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இருந்து விலக்கி, அந்நாட்டில் இருக்கும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய அரசு, கனடாவில் உள்ள தனது குடிமக்களைப் பாதுகாக்க, இந்திய எதிர்ப்பு கருத்துக்கு ஆதரவானவர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மீது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.