தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் - வைகோ கண்டனம் - ஐநா மனித உரிமை ஆணையம்

சென்னை: ஐநாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வாக்கெடுப்பைப் புறக்கணித்தற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை
இலங்கை

By

Published : Mar 23, 2021, 7:14 PM IST

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா உள்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க்குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது இலங்கை அரசு. இது குறித்து, சர்வதேச சமுதாயம் தனது கடமையில் தவறியது.

எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன.

இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளி விவகாரத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாள்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள். இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details