ஹைதராபாத்: தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. குவைத்-இந்தியா மோதிய இந்த போட்டியில் பெனால்டி ஷீட் அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பின்னர் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய கால்பந்து வீரர் ஜீக்சன் சிங் தேசிய கொடிக்கு பதிலாக ஏழு வண்ணங்களைக் கொண்ட ஒரு கொடியினை போர்த்தி இருந்தார். மணிப்பூரின் மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த பாரம்பரிய ஏழு குலங்களை பிரதிபலிக்கும் வகையிலான, ஏழு நிறங்களைக் கொண்ட அந்த கொடியை அவர் போர்த்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மணிப்பூரைச் சேர்ந்தவரும், இந்திய கால்பந்து அணியின் டிபென்ட் மிட்ஃபீல்டருமான ஜீக்சன் சிங் செயலுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் அதுகுறித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அவரது ட்விட்டர் பதிவில், “யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் கொடியுடன் வரவில்லை. எனது மாநிலமான மணிப்பூரில் நடக்கும் பிரச்னைகளை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரவே நான் முயன்றேன். இந்த வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “எனது சொந்த மாநிலமான மணிப்பூரில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன். அணிக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி” எனப் பதிவிட்டு உள்ளார். ஜீக்சன் சிங் செய்த இந்தச் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக மெய்டீஸ் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். மெய்டீஸ் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக் கூடாது என குக்கி இனத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.