லண்டன்: கடந்தாண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. நான்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஐந்தாவது போட்டியின்போது இந்திய அணி வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது.
தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. மேலும், தொடரின் வெற்றியை தீர்மானிக்க கடைசி போட்டிக்கு பதிலாக மற்றொரு போட்டி நடத்தப்படும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ரேபிட் டெஸ்டில் உறுதி: விடுபட்ட அந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமல்லாமல் டி20, ஒருநாள் தொடர்களையும் இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடம் நேற்று (ஜூன் 25) மேற்கொள்பட்ட ரேபிட் பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அவர் அணி வீரர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனிமையில் இருப்பதாகவும், அவர் பிசிசிஐ மருத்துக்குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.