சீனாவின் ராணுவமான 'PLA' கிமு 6 ஆம் நூற்றாண்டின் போர் மற்றும் படை குறித்த சிந்தனையாளரான சுன் சூவின் புகழ்பெற்ற 'போர் எனும் கலை' என்ற நூலைப் பயன்படுத்தி தனது படைத் திறனை மேம்படுத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில் பெருகிவரும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்ட இந்திய ராணுவம், சாணக்கியரின் ‘அர்த்தசாஸ்திரம்’ மற்றும் திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ ஆகிய நூல்களில் கூறியுள்ள அடிப்படைக் கோட்பாடுகளை ஆய்வு செய்யும் வேலையைத் தற்போது தொடங்கியுள்ளது.
திருவள்ளுவர் மற்றும் சாணக்கியர் ஆகியோர் முறையே தமிழில் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் தங்களின் படைப்புகளை எழுதியவர்கள். போர்க்கப்பல், யுக்தி, தத்துவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரம் பற்றிய சிந்தனைகளுக்காக இவர்கள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள்.
சாணக்கியர் மற்றும் திருவள்ளுவரின் கருத்துகளின் தற்கால தேவைகள் குறித்து பேசிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, பண்டைய கால ஞானம் தற்போதைய சூழலில் எவ்வாறு பயன்பாடுகிறது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
"எதிர்காலத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் சில சமயங்களில், கடந்த காலம் நமக்குக் கொடுக்கும் பாடங்களை மறந்து விடுகிறோம். பலமான சக்திகள் அனைத்து காலத்திலும் உள்ளவை. மேலும், அவை எதிர்காலத்தில் முக்கிய பங்கை வகிக்கும். புதிய வழிகளில் இருந்தாலும், மாறிவரும் மூலோபாயத்திற்கு ஏற்ப அவை மாறுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட நமது பண்டைய இந்திய அரசியல் அறிவும், சக்தியும் இன்றும் காலம் தாண்டி பொருத்தமானதாகவும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்,” என்று அவர் கூறினார்.
ஜெனரல் நரவனே 'பிரக்யான் கான்க்ளேவ் 2022' கருத்தரங்கில் 'எதிர்கால போர்கள் மற்றும் எதிர் நடவடிக்கைகளின் வரையறைகள்' மற்றும் நிலப் போர் ஆய்வுகளுக்கான மையத்தை (CLAWS) தொடங்கிவைத்து பேசினார்.