பூஞ்ச் : பயங்கர ஆயுதங்களுடன் எல்லைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் அடுத்த எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் இரவு பகலாக தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச எல்லை கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ராணுவ வீரர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எல்லைக் கட்டுபாடு பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று பயங்கரவாதிகள் அதிபயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
எல்லை வேலியை கடக்க முயன்ற நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்களை கண்டறிவதற்குள் எல்லைக்கு வெளியே கீழே விழுந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொது மக்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் படுகாயத்துடம் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.
உளவுத் துறை அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு போலீசாருடன் ராணுவ வீரர்கள் நடத்திய ஆபரேஷ ரெஷன் திட்டத்தில் ஊடுருவ முயன்றவர்கள் சுடப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறினர். கிருஷ்ண காடி செக்டார் வழியாக எல்லைத் தாண்ட முயன்றவர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து இந்திய ராணுவம் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 23 மற்றும் 24ஆம் தேதி அன்று கிருஷ்ண காட்டி செக்டரில் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 3 ஊடுருவல்காரகள் எல்லைக் கட்டுப்பாடு பகுதி நோக்கி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இந்திய வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான ஒபைத் கயூம் மற்றும் 55 வயதான முஹம்மது காசிம் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மச்சில் செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்றதாக இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த ஜூன் 16ஆம் தேதி, குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய ஐந்து வெளிநாட்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :மணிப்பூர் கலவரம் : மத்திய அரசின் தோல்வியே மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் - திருச்சி சிவா!