டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்தியா - சீனா உறவுகள் குறித்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "எல்லைப் பிரச்னையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தன்னிச்சையாக மாற்றியமைக்க சீனா முயற்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.
சீனா இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால், இருநாடுகள் இடையிலான உறவு மிகவும் கடினமாக மாறிவிடும். கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதே உண்மை" என்றார்.
பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "பாலஸ்தீன பிரச்னைக்கு இருதரப்பும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். பாலஸ்தீன அகதிகள் நலனுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இந்தியா அதிகரித்துள்ளது" என்றார்.