கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை, பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிந்த நிலையில், அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. கடந்த 10ஆம் தேதி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடந்த மூன்றாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவிச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
ரோகித் சர்மா 56 ரன், சுப்மான் கில் 58 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, விராட் கோலி, கே.எல். ராகுல் இணை ஜோடி சேர்ந்தது. நிதான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தனர். ஆட்டத்தின் 24 புள்ளி 1 ஓவரில் மழைக் குறுக்கிட்டது. தொடந்து மழை கொட்டியதால் ஆட்டம் ரிசர்வ் டே-க்கு மாற்றப்பட்டது. அதன்படி நேற்று (செப். 11) ரிசர்வ் டே ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல், பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர். பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்த இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். அபாரமாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 47வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அவரை தொடர்ந்து கே.எல். ராகுலும் சதம் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 111 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். பேட்டிங்கிற்கு ஆட்டம் நன்கு ஒத்துழைத்ததால் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை துளியும் எடுபடவில்லை.
ஷாகீன் அப்ரிடி, பஹீம் அஸ்ரப், ஷதாப் கான் ஆகியோர் 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து தங்களது அணிக்கு பதாகமான சூழலை ஏற்படுத்தினர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இமாம் உல் ஹக் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டாகி விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். சீதோஷ்ண நிலையின் காரணமாக சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதனால் குல்தீப் யாதவ் காட்டில் அடமழை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு நேர்த்தியாக பந்துவீசி பாகிஸ்தான் வீரர்களின் கலங்கடித்தார்.
சொல்லிக் கொள்ளும் வகையில் அகா சல்மான் மற்றும் இப்திகார் அகமது மற்றும் சிறிது நேரம் நீடித்து தலா 23 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 32 ஓவர்கள் முடிவில் 128 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது. ஷாகீன் அப்ரீடி மட்டும் 7 ரன் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
நசீம் ஷா, ஹரீஸ் ரவுப் ஆகியோர் காயம் காரணமாக ஏபிஎஸ் ஹர்ட் கொடுத்து விளையாடாமல் போனது பாகிஸ்தான் அணிக்கு சற்று பின்னடைவு என்று கூறலாம். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் அள்ளினார். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்த்திக் பாண்ட்யா ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க :Virat Kohli: சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த விராட் கோலி!