தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Ind Vs NZ 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி! - ஹர்த்திக் பாண்டியா

3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

இந்திய அணி
இந்திய அணி

By

Published : Jan 24, 2023, 9:57 PM IST

இந்தூர்:டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12 ரன்களிலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் நேர்த்தியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரார்கள் கேப்டன் ரோகித் சர்மா(101 ரன்), சுப்மான் கில்(112 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் இறுதி கட்டத்தில் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஹர்த்திக் பாண்ட்யா (54 ரன்) அரை சதம் விளாசி இந்திய அணி 350 ரன்களைக் கடக்க உதவினார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.

ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்திய அணி

தொடர்ந்து 386 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி ரன் கணக்கை துவங்கும் முன்பே விக்கெட் கணக்கைத் தொடங்கியது. ஹர்த்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் தொடக்க வீரர் பின் அலென் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து நிதானம் காட்டிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர்.

நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிவென் கான்வாய், ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் ஹென்ரி நிகோலஸ் (42 ரன்), டேரி மிட்செல் (24 ரபன்), கேப்டன் டாம் லாதம் டக் -அவுட் என நியூசிலாந்து வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

இதனால் இந்திய அணியின் கை சற்று ஓங்கத் தொடங்கியது. மறுபுறம் நங்கூரம் போல் விளையாடிய டிவென் கான்வாய் சதம் விளாசினார். கான்வாயை வெளியேற்ற இந்திய வீரர்கள் திணறி வந்தனர். ஒருவழியாக உம்ரான் மாலிக் வீசிய பந்தை கான்வாய் தூக்கி அடித்த நிலையில் அது ரோகித் சர்மா கையில் தஞ்சமடைந்தது.

அதிரடியாக விளையாடிய டிவென் கான்வாய், 100 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார். டிவென் கான்வாய் வெளியேறியதும் ஆட்டம் கண்ட நியூசிலாந்து அணியை இந்திய வீரர்கள் எளிதில் சுருட்டி வெளியேற்றினர். 41.1 ஓவர் முடிவில் 295 ரன்களுக்கு நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வரும் 27ஆம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் ஃபைன்

ABOUT THE AUTHOR

...view details