பல்லேகலே :நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டு உள்ள நிலையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று (செப். 4) இலங்கை பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் கோதாவில் இறங்கின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணியின் இன்னிங்சை குஷல் புருடல், ஆசிப் ஷேக் ஆகியோர் தொடங்கினர்.
நிதானமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயங்கர குடைச்சல் கொடுத்து வந்தனர். அடித்து ஆடிய குஷல் புருடல் தன் பங்குக்கு 25 பந்துகளில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்தடுதது களமிறங்கிய பிம் ஷர்கி (7 ரன்), கேப்டன் ரோகித பவுடல் (5 ரன்), குஷல் மல்லா (2 ரன்) என இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதனிடையே நிலைத்து நின்று விளையாடி அரை சதம் அடித்த தொடக்க வீரர் ஆசிப் ஷேக் தன் பங்குக்கு 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் குல்சன் ஜா (23 ரன்), திபேந்திர சிங் (29 ரன்), சோம்பல் கமி (48 ரன்) ஆகியோரின் ரன் வேகத்தால் நேபாளம் அணி 200 ரன்களை கடந்தது.