டப்ளின் :அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அயர்லாந்து அணியில் பால்பிர்னி மற்றும் கேப்டன் பவுல் ஸ்டிர்லிங் அகியோர் இன்னிங்சை தொடங்கினர். ஆரம்பமே அயர்லாந்து அணிக்கு தடுமாற்றமே ஏற்பட்டது. பவுண்டரி அடித்து அணியின் ரன் கணக்கை தொடங்கிய பால்பிர்னி, பும்ராவின் அடுத்த பந்துக்கு இரையாகினார். அதே பும்ரா ஓவரில், அடுத்த களமிறங்கி விக்கெட் கீப்பர் லொர்கன் டக்கர், சஞ்சு சாம்சனிடன் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார்.
சீரான இடைவெளியில் அயர்லாந்து அணிக்கு விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. இதனிடையே கைகோர்த்த கர்டிஸ் கேம்பர் மற்றும் பேரி மெக்கெர்தி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இருவரும், அவ்வப்போது சிக்சர்களும் விளாசினர்.
கர்டிஸ் கேம்பர் தன் பங்குக்கு 39 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்த போராடிக் கொண்டு இருந்த மெக்கெர்தி, கடைசி பந்தில் சிக்சர் விளாசி அரைசதம் அடித்தார். மெக்கெர்தியின் அரைசதம் உதவியுடன், அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் பும்ரா, பிரசித், ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அனியின் இன்னிங்சை யாஷ்ஸ்வி ஜெய்ஷ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடங்கினர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இருவரும் அயர்லாந்து பந்துவீச்சாளர்களை சற்று திணறடித்தனர்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் தன் பங்குக்கு 24 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா நிலைக்கவில்லை. அதேஓவரில் டக் அவுட்டாகி நடையை கட்டினார். 6 புள்ளி 5 ஓவர்கள் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 47 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அப்போது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. இடைவிடாது தொடர்ந்து மழை கொட்டிய நிலையில், டக் வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க :india vs ireland t20:இளம் தலைமுறையுடன் களம் இறங்கும் இந்திய அணி அதிரடி காட்டுமா...