புது டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இன்று(டிச.7) மாநிலங்களவையில் , ஜி 20 மாநாட்டின் மூலம் உலகளாவிய தெற்கின் பிரச்னைகளுக்கு இந்திய தனது வலுவான குரலைப் பதிவு செய்யுமெனப் பேசினார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “இந்தியா உலகளாவிய தெற்கின் பிரச்னைகள் குறித்து வலுவான குரலைப் பதிவு செய்யும். இது நமது மரபணுவிலேயே உள்ள ஒன்று தான். இந்த ஜி 20 மாநாட்டின் மூலம் இந்தியாவின் வளர்ச்சி, ஜனநாயகம், வேற்றுமைத் தன்மை ஆகியவையை உலகிற்கு காட்டயிருக்கிறோம்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை என்பது இந்திய மக்களுக்கு சேவை புரிய அமைக்கப்பட்டது. அதற்கு எதை வேண்டுமென்றாலும் செய்வோம். எத்தகைய சூழலிலும் இந்திய மக்களின் நலனைப் பேணவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்தியா தற்போது பல்வேறு நாடுகளுடன் நட்பு பாலங்களை கட்டமைத்து வருகிறது.
மேலும், வரவிருக்கும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசியை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளோம். நம் அழைப்பை அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து வருகிற ஜன 8 -10ஆகிய தேதிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தேசத்திற்கு அளித்த கொடையைப் போற்றும் நாளான 17ஆவது பிரவசி பாரதிய திவாஸ் நாளை இந்தியா இந்தூரில் கொண்டாடுகிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக குயானா அதிபர் இர்ஃபான் அலி அழைக்கப்பட்டுள்ளார்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: இந்தியா உலகிற்கு வழிகாட்டும் - பிரதமர் மோடி