டிரினிடாட் :இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாடில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து ஷர்துல் தாகூர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முகேஷ் குமார் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரிக் மெக்கென்சி என்ற வீரரும் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுமாக உள்ளதாக அந்த அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் தெரிவித்து உள்ளார்.
இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெள்ளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். ஏதுவான பந்துகளை அடித்து ஆடிய இருவரும் அவ்வப்போது சிக்சர், பவுண்டரி அடிக்கவும் தவறவில்லை.
உணவு இடைவேளை வரை நிதான ஆட்டத்தை விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வந்தனர். உணவு இடைவேளைக்கு பின் களமிறங்கி அடித்து ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்த கையோடு ஆட்டம் இழந்தார். 74 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சர் என விளாசி 57 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாசன் ஹோல்டர் வீசிய பந்தில் புதுமுக வீரர் கிரிக் மெக்கென்சியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுபுறம் களமிறங்கிய சுப்மான் கில் ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக தொடர்ந்து விளையாடி வருகிறார். 35 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 149 ரன்கள் குவித்து உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா ரன்களுடனும், சுப்மான் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க :IND Vs WI: அஸ்வினின் அபார ஆட்டம்.. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!