ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அது 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 17) ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்ற இரு அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். அவர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே பல்வேறு ஆட்டங்களில் வெற்றி வாகை சூடி உள்ளது.
இந்திய அணியில் திடீரென வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் விலகி இருப்பது அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் இந்திய அணியில் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய வீரர்கள் திறம்பட செயல்படக் கூடியவர்கள்.
அதேநேரம் தென் ஆப்பிரிக்க மைதானம் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதேநேரம் தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அதிரடியாக விளையாடக் கூடிய அணி. அண்மையில் முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.