மும்பை :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து அணியை பழிதீர்க்க இந்திய வீரர்கள் மும்முரம் காட்டினர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 79 ரன்கள் குவித்து இருந்த போது கால் பிடிப்பு பிரச்சினை காரணமாக ரிட்டயர்ட் ஹார்ட் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியுடன் கூட்டணி அமைத்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்தார். மறுமுனையில் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 50வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார். சதம் விளாசிய விராட் கோலி (117 ரன்) சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (105 ரன்) சதம் விளாசிய கையோடு அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரு ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.