தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

INDIA vs BJP: 6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முந்துவது யார்? - மேற்குவங்கம்

Six State by election result: எதிர்கட்சிகள் கூட்டாக இணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கிய பிறகு மேற்கு வங்கம், கேரளா, உ.பி., உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

INDIA vs BJP: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - வெல்லப் போவது யார்?
INDIA vs BJP: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - வெல்லப் போவது யார்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 12:57 PM IST

ஹைதராபாத்: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவு, மத்திய அமைச்சர் பிரதிமா பவுமிக், தனது பதவியை ராஜினாமா செய்தது உள்ளிட்டவைகளால், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, கடந்த 5ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று (செப்.8) காலை 8 மணி துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில், கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்து உள்ள நிலையில், நடைபெற்று உள்ள முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 இடங்களில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளதால், இந்த இடைத்தேர்தல்களில் வெல்லப்போவது 'இந்தியா' கூட்டணியா அல்லது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா என்ற பரபரப்பு, அனைவரையும் தொற்றிக் கொண்டு உள்ளது.

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, சமீபத்தில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், காங்கிரஸ் கட்சி சார்பில் களம் கண்டார். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜேக் சி தாமஸ், பாரதிய ஜனதா கட்சி சார்பில் லிஜின் லால் களம் கண்டனர். இந்த இடைத்தேர்தலில் 71.84 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தொகுதியில் 12 மணி நிலவரப்படி சாண்டி உம்மன் முன்னிலையில் உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கோஷி தொகுதி எம்.எல்.ஏவான சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த தாரா சிங் சவுகான், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதன் எதிரொலியாக அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக, மீண்டும் அவரே அறிவிக்கப்பட்டார். சமாஜ்வாதி கட்சி சார்பில் சுதாகர் சிங் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில், சமாஜ்வாதி கட்சிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இந்த தேர்தலில், 49.42 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தன. ‘இந்தியா’ கூட்டணியின் வருகையைத் தொடர்ந்து, முதன்முறையாக, வாக்குகள் சரிவடைந்து இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த தொகுதியில் சுதாகர் சிங் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியின் எம்.எல்.ஏ., மறைவைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, மறைந்த எம்.எல்.ஏ.,வின் மனைவி பார்வதி தாஸ், வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில், பசந்த் குமார் களம் இறக்கப்பட்டு உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்த பசந்த் குமார், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தலில் 55.35 சதவீத அளவிற்கு வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி எம்.எல்.ஏ., ஜெகர்நாத் மகதோ மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் பெபி தேவியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யசோதா தேவியும் களம் இறக்கப்பட்டனர். பெபி தேவி, மறைந்த எம்.எல்.ஏ. ஜெகர்நாத் மகதோவின் மனைவி ஆவார். இந்த இடைத்தேர்தலில் 64.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

திரிபுரா மாநிலம் பாக்ஸாநகர் தொகுதி எம்.எல்.ஏ. சம்சுல் ஹேக் மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தபைஜல் ஹூசைனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிஜான் ஹூசைனும் களம் கண்டனர். இந்த தேர்தலில் 86.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

திரிபுரா மேற்கு மக்களவையின் கீழ்வரும் தன்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரதிமா பவுனிக், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிந்து தேப்நாத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுசிக் தேப்நாத்தும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் 81.88 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., பிஷ்ணு படா ரேவின் மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சந்திரா ராய், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்மல் சந்திரா ராய் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தபஸி ராய் வேட்பாளராக களம் கண்டு உள்ளனர். இந்த தேர்தலில் 74.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்ட நிலையில் நடைபெற்று உள்ள் முதல் இடைத் தேர்தல் இதுவாகும். இந்த இடைத்தேர்தல் முடிவுகள், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கும், ‘இந்தியா’ கூட்டணிக்கும் பெரும் கவுரவப் பிரச்சினையாக அமைந்து உள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: Senthil Balaji Bail : ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்! விரைவில் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details