இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 40 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராகக் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 684 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்து 73 ஆயிரத்து 479ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (நவ.13) ஒரே நாளில் 520 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 714ஆகக் குறைந்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 81 லட்சத்து 63 ஆயிரத்து 572ஆக உயர்ந்துள்ளது.