டோக்கியோ: இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஏற்கவுள்ளது.
இந்த பொறுப்பையேற்ற பிறகு, செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் தலைமை பொறுப்பையும் ஏற்க உள்ளது. இந்த சர்வதேச கூட்டாண்மையின் தலைமைப் பொறுப்பு, மனிதகுல மேம்பாட்டிற்காகவும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப செயல்பாட்டினை ஊக்குவிற்பதற்காகவும் பயன்படும். செயற்கை நுண்ணறிவுத்துறை மூலம் வரும் 2035ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்திற்கு 967 பில்லியன் டாலர்களையும், 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 450-500 பில்லியன் டாலர்களையும் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கில் 10 சதவீதமாகும்.