கரோனா வைரஸுக்கு எதிரான் போரில், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (The Russian Direct Investment Fund) தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாள்களில் ஆண்டுதோறும் 85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் ஆர்டிஐஎஃப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ’ஸ்புட்னிக் வி’ பயன்பாட்டுக்கு ஒப்புதல்
ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள், டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுடன் இணைந்து இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட உள்ளூர் மருத்துவப் பரிசோதனைகளில் பெறப்பட்ட நேர்மறையான முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது அவசரகால அடிப்படையில் இந்தியாவில் இம்மருந்தைப் பயன்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
உலக மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் அல்லது 300 கோடி நபர்களை இந்தத் தடுப்பூசி சென்றடைய உள்ளது. இந்நிலையில், ’ஸ்புட்னிக் வி’க்கு ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக ஆர்டிஐஎஃப் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா திகழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பயன்பாட்டில் முக்கிய மைல்கல்
இந்தியாவில் ’ஸ்பூட்னிக் வி’யின் மருத்துவப் பரிசோதனைகள், உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா- ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் விரிவான ஒத்துழைப்பை வளர்த்து வரும் நிலையில், இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக RDIF தலைமை நிர்வாக அலுவலர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலகின் பழமையான, புகழ்பெற்ற மருத்துவப் பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டில், ’ஸ்பூட்னிக் வி’ 91.6 விழுக்காடு செயல்திறன் கொண்டு கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவதாக குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க:’ஸ்புட்னிக் V’ இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அனுமதி