உலகை அச்சுறுத்தி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு, பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி, உலகின் முதல் கரோனா தடுப்பூசியான ’ஸ்புட்னிக் வி’ யை ரஷ்யா உருவாக்கியது.
இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஸ்பூட்னிக் வி உற்பத்திக்காக பேச்சு நடத்தப்பட்ட 110 உற்பத்தி தளங்களில், இந்தியா, கொரியா, பிரேசில் மற்றும் சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய 10 உற்பத்தி நிறுவனங்களை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமான ஆர்.டி.ஐ.எஃப் தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைவர் கிரில் டிமிட்ரிவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், “ வரும் 2021 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை சுமார் 300 மில்லியன் டோஸ் அளவுக்கு இந்தியா தயாரிக்கவுள்ளது. இதற்கான இந்தியாவின் நான்கு பெரிய உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
ஸ்புட்னிக் வி உற்பத்திக்காக 110 தயாரிப்பு தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் தேவைகளின் அடிப்படையில் 10 ஐ தேர்வு செய்துள்ளோம். ஸ்புட்னிக் வி தீவிரமாக தயாரிக்கப்பட்டு, மனித சமூகத்தை காக்கும் ஒரு பாதுகாப்பான கட்டமைப்பு உருவாக்கப்படும் “ என்றார்.
இதையும் படிங்க: அழகு, ஆரோக்கியம் நிறைந்த கோராபுட் மஞ்சளின் மகத்துவம்!