டெல்லி: இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டுவருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிச. 12) நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் காணொலி மூலமாகத் தெரிவித்தார்.
இது குறித்து மோடி பேசுகையில், “நாங்கள் இன்று எங்கள் லட்சியங்களை உயர்த்துவதற்கு முயற்சித்துவருகிறோம். இருப்பினும் கடந்த கால நிலைமைகளையும் மறக்கக் கூடாது. எங்கள் லட்சியங்களை மறுபரிசீலனை செய்வதுடன் மட்டுமில்லாமல், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிரான எங்களின் சாதனைகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நமது குரல்கள் வருங்கால சந்ததியினருக்கு நம்பத்தகுந்ததாக இருக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
பாரிஸுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கு முயற்சி எடுத்துவருகிறோம். காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்பார்ப்புகளையும் கடந்து நாடு செயல்பட்டுவருகிறது.
2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கார்பன் வாயு வெளியேற்றம் 21 விழுக்காடு குறைந்துள்ளது. இந்தியாவின் சூரிய உற்பத்தித் திறன் 2014ஆம் ஆண்டு 2.63 ஜிகாவாட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு 36 ஜிகாவாட்டாக வளர்ந்துள்ளது.
உலகின் நான்காவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் நம்முடையது. இது 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் 175 ஜிகாவாட்டை எட்டும். இந்தியா 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கொண்டதாக மாற்றும் லட்சிய இலக்கைக் கொண்டுள்ளது.