டெல்லி : பாகிஸ்தானில் உள்ள கோயில் ஒன்றில் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்துக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி (Arindam Bagchi) கூறுகையில், “பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் கும்பல் ஒன்றால் வன்முறை தாக்குதலுக்குள்ளாக்கப்படுவது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளத்தில் காண முடிந்தது.
பாகிஸ்தானில் கோயில் மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்! இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்தச் சம்பவத்தில் ஈடுபடுபட்டவர்களை கைதுசெய்ய வேண்டும். இதில் உறுதியான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை தடுப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் கும்பல் ஒன்றால் தாக்கப்படுவது தொடர்பான காணொலியை பாகிஸ்தான் இந்து சமூகத் தலைவர் ரமேஷ் குமார் வங்வானி புதன்கிழமை (ஆக.4) சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு ஆலயம் கண்டுபிடிப்பு!