டெல்லி: சீக்கியர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் கடந்த பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்புகளின் ஒன்றான வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்து பல்வேறு வித போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பின் தலைவரான அமிரித் பால் சிங் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி பஞ்சாப் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது அவர் தப்பித் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
அவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அம்ரித் பால் சிங்கிற்கு உதவியதாக பாட்டியாலாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ஜாக்கெட், கண்ணாடி, உள்ளிட்ட அணிந்து இருக்கும் அம்ரித் பால் சிங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இந்தியா - நேபாளம் எல்லையில் பாதுகாப்பு சோதனையைப் பலப்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்ரித் பால் சிங் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளில் உள்ள காலிஸ்தான் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.