டெல்லி: இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் ஹுசைன் பிராஹிம் தாஹா, மூன்று நாட்கள் பயணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றிருந்தார்.
அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹுசைன் பிராஹிம் தாஹா, நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இருநாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு ஒருங்கிணைக்க தாங்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஹுசைன் பிராஹிம் தாஹாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவகாரத்தில் ஓஐசி அமைப்புக்கு எந்த பங்கும் இல்லை என்றும், இந்தியாவின் உள்விவகாரங்களில் ஹுசைன் பிராஹிம் தாஹா தலையிட முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.