டெல்லி:இந்தியாவிலிருந்து 6.5 டன் மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்கு இன்று (அக். 22) அனுப்பப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-17 ரக போக்குவரத்து விமானம் மூலம், இந்த மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-17 ரக போக்குவரத்து விமானம், மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை எகிப்திலுள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் இருந்த 41 கனடா தூதர்கள் வெளியேற்றம்; கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது "X" பதிவில், "பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகளை அனுப்புவதாகவும், 6.5 டன் மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை பாலஸ்தீன மக்களுக்காக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎப் 'சி-17' ரக போக்குவரத்து விமானம் மூலம் எகிப்திலுள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை சார்ந்த பொருட்கள், மாத்திரைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சானிட்டரி சார்ந்த பொருட்கள், தார்ப்பாய்கள், படுக்கைகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவை அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஹமாஸை வளர்த்தெடுத்தது இஸ்ரேலா? யாசர் அராபத்துக்கு செய்த துரோகம்..! மார்பில் பாயும் வளர்த்த கடா?
காசாவில் பொதுமக்கள் இறந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸூக்கு இரங்கல் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இந்தியா இந்த நிவாரணப் பொருட்களை பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் மேற்கொள்ளும் என பிரதமர் மோடி, பாலஸ்தீன தலைவர்களிடம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது முதல்கட்ட மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஐ.நா நிவாரணம் வழங்கி வருகிறது. அதன் மூலமாகவும் இந்தியா, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் வெளியேற்றம் - கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்