டெல்லி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ‘மண்ணைக் காப்போம் இயக்கம்' குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர், "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் பலதரப்பட்டவை. உலகின் பெரிய நவீன நாடுகள் பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல்.
அதிகபட்ச கார்பன் உமிழ்வை செய்துவருகின்றன. உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4 டன்னாகும். ஆனால், இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே வெளியேற்றுகிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியா நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் செயல்பட்டு வருகிறது.
2070ஆம் ஆண்டுக்குள் இந்தியா பூஜ்ய கார்பன் உமிழ்வு என்னும் இலக்கை எட்டும். மண்ணைக் காப்பாற்ற ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம்.
- மண்ணை ரசாயனமற்றதாக்குவது எப்படி?
- தொழில்நுட்ப மொழியில் கூறப்படும் மண்ணில் வாழும் உயிரினங்களை எவ்வாறு காப்பாற்றுவது?
- மண்ணின் ஈரப்பதத்தை எவ்வாறு பராமரிப்பது? அது வரை நீர் இருப்பை அதிகரிப்பது எப்படி?
- நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்குவது எப்படி?
- காடுகளின் குறைப்பினால் தொடர்ந்து மண் அரிப்பை எவ்வாறு நிறுத்துவது?
விவசாயத் துறையில் மண் பிரச்சினையைப் போக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நமது விவசாயிகளுக்கு மண்ணின் வகை, மண்ணின் குறைபாடு, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.