டெல்லி: கனடா குடிமக்களுக்கு இந்தியா மீண்டும் இ- விசா சேவையைத் தொடங்கியது என BLS இண்டர்நேஷனல் இணையதளம் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா - கனடா இடையே விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் கடந்த ஜூன் 18ஆம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்தீப் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை தொடங்கியது.
மேலும், கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அரசு அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் நாட்டை விட்டு வெளியேறும் படி மத்திய அரசு கெடு விதித்தது. அதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவத் தொடங்கியது. இதனையடுத்து கனடாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கான அனைத்து வகை நுழைவு விசா சேவைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்துவதாகவும், இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவிற்கு இந்தியா தெரிவித்தது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முடிவை இந்திய அரசு அறிவித்தது. இதனால், இரு நாடுகளுக்கிடையே உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தரப்பில், இந்தியா - கனடா இடையேயான பிரச்சினையை இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இந்தியா மருத்துவம், வணிகம், மாநாடு, நுழைவு ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே விசா சேவையை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இ-விசா சேவையை இந்தியா தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க:மேற்கு வங்கம் பிராண்ட் அம்பாசிடராக சவுரவ் கங்குலி நியமனம் - முதலமைச்சர் மம்தா அறிவிப்பு!