கனடா (ஒட்டவா): கனடாவில் 2023 ஜீன் 18ஆம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கும், இந்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை தொடங்கியது.
இதனால், கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அரசு தெரிவித்தது. இதேபோல், இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேறுமாறு தெரிவித்தது. மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க:இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை!
கனடாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கான அனைத்து வகை நுழைவு விசா சேவைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்துவதாகவும், இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவிற்கு இந்தியா தெரிவித்தது. இதனால், இரு நாடுகளுக்கிடையே உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்தியாவில் டெல்லி, சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களில் இந்தியாவில் கனடா தூதரக அதிகாரிகள் பணிபுரிந்து வந்த நிலையில், டெல்லியிலுள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைத் தவிர, மற்ற கனடா தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் ரத்து செய்யப்படும் என இந்தியா தெரிவித்து இருந்தது. இதற்கு இடையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தரப்பில், இந்தியா - கனடா இடையேயான பிரச்னையை இரு நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.
இதையும் படிங்க:இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இஸ்ரேல் சென்றடைந்தார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்!
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா மீதான கனடா குற்றச்சாட்டினால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு பலமாக இருந்தால், மீண்டும் விசா சேவைகளை இந்தியா தொடங்கும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கனடாவிலுள்ள இந்திய தூதரக தரப்பில், கனடாவிலிருந்து இந்தியா செல்ல குறிப்பிட்ட நான்கு வகை விசா சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என நேற்று (அக்.25) அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் வர்த்தக விசா, மருத்துவ விசா, மாநாடு விசா மற்றும் முக்கிய கூட்டங்களுக்கான விசா ஆகிய விசாக்களுக்கு மட்டும் இன்று (அக்.26) முதல் விசா வழங்கப்படும் என கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வெள்ளை மாளிகை தேசிய விருது!