இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 74ஆவது ஆண்டு விழா மும்பையில் நேற்று (செப் 26) நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "நாட்டில் வங்கி சேவைகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு பொருளாதார மையங்கள் உருவாகிவரும் சூழலில் அதற்கேற்ப வங்கித் துறையும் வளர வேண்டும். எனவே, நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ வங்கிச் சேவைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடிகளைச் சுலபமாக எதிர்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி போன்ற பெரிய வங்கிகள் பல நாட்டிற்குத் தேவை.
இதைக் கருத்தில் கொண்டுதான் பொதுத் துறை வங்கி இணைப்பை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செய்துகாட்டிய ஊழியர்களுக்கு வாழ்த்துகள். ஸ்டேட் வங்கிபோல நான்கு-ஐந்து வங்கிகள் நாட்டில் இருப்பது நலம்.
உலகில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப வங்கித் துறையும் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆப்டிக் பைபர் (கண்ணாடி இழை) இணைய வசதி சென்று சேர்ந்துள்ளது. எனவே அங்கு டிஜிட்டல் வங்கிச் சேவையை உருவாக்குவது மிக எளிது.
நாட்டின் பொருளாதாரம் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் இந்தக் காலகட்டத்தில், வங்கிகள்தாம் இந்த மாற்றத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்து அதைச் சாத்தியமாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்