ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் (ஆந்திரப் பிரதேசம்) : இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரப் பிரதேசம், சூலூர்பேட்டை அருகில் உள்ள இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜுலை 14ஆம் தேதி) பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
சந்திரயான் 2 திட்டம் இந்தியர்களின் இதயத்தை மட்டுமின்றி, உலகம் முழுக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கனவுகளையும் தகர்த்து எறிந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.. அந்த முயற்சியில் மட்டும் இந்தியா வென்று இருந்தால் கடந்த 3 வருடங்களில் விண்வெளி துறையில் மாபெரும் சாதனைகளை படைத்து இருக்கும். அப்போது விட்ட வெற்றியை இப்போது பிடிக்க சந்திரயான் - 3 விண்கலத்தை, இந்தியா விண்ணுக்கு அனுப்ப உள்ளது.
சந்திரயான்-3 திட்டம் என்பது, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் அங்கு ரோவர் பயணப்படுவதில் இந்தியாவின் இறுதித் திறனை நிரூபிப்பதாய் அமைந்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்திற்கான இந்தியாவின் திறனை நிரூபிப்பது, நிலவில் ரோவர் சவாரி செய்வதை நிரூபிப்பது மற்றும் அவ்டத்திலேயே அறிவியல் சோதனைகளை நடத்துவது உள்ளிட்டவைகள், சந்திரயான்-3 திட்டத்தின் பரந்த பணி நோக்கங்கள் ஆகும்.
சந்திரயான் - 3 விண்கலம் குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளதாவது, சந்திரயான்-3 விண்கலம், முழுவதுமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லேண்டர் மாட்யூல் (LM), ஒரு உந்துவிசை தொகுதி (PM) மற்றும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இது வருங்காலத்தில், கோள்களுக்கிடையேயான பயணங்களுக்கு புதிய திறன்களை உருவாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. லேண்டர், நிலவின் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மென்மையாக தரையிறங்குவதற்கும், ரோவரை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுகிறது. இது அதன் இயக்கத்தின் போதே, நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வு செய்யும் திறன் பெற்றது.