மும்பை (மகாரஷ்டிரா):இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலத்தின் திறப்பு விழா இன்று (ஜன.12) நடைபெற உள்ளது. "அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது" எனப் பெயரிடப்பட்ட அந்த பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்வில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக இப்பாலத்திற்கு 'அடல் சேது' என பெயரிடப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கான அடிக்கல் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு, மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) சார்பில், கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. இப்பாலத்தின் பணிகளுக்காக, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) 18 ஆயிரம் கோடி ரூபாய் மேம்பாட்டுக் கடனாக வழங்கியது.
மேலும், 5.5 கி.மீ நீளம் தரைப் பகுதியிலும், 16.5 கி.மீ நீளம் கடல் பகுதியிலும் என மொத்தம் இந்த பாலம் 21.8 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. இப்பாலத்தின் மூலம், உலக அளவில் 12 பெரிய கடல் பாலத்தைக் கொண்ட பெருமையை இந்தியா அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இருபுறமும் மூன்று தடங்கள் என 6 தடங்களைக் கொண்ட இந்த பாலம், தெற்கு மும்பையின் செவ்ரி (Sewri) பகுதியில் துவங்கி, தானே க்ரீக் (Thane Creek) வழியாகச் சென்று, நவா ஷேவா (Nhava Sheva) அருகே உள்ள சிர்லே (Chirle) பகுதியில் நிறைவடைகிறது.
இந்த மிகப்பெரிய கடல் பாலம், மும்பை-புனே விரைவுச்சாலை, மும்பை-கோவா விரைவுச்சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நவி மும்பை சர்வதேச விமானம் ஆகியவற்றை எளிதில் இணைக்கும். மேலும், செவ்ரி, சிவாஜி நகர், சிர்லே பொன்ற நகரின் முக்கியமான பகுதிகளையும், போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக இணக்கும் வகையில், இந்த பாலம் உதவும் என கருதப்படுகிறது.