புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதுவரை நாட்டில் 22 ஆயிரத்து 427 பேர் கரோனா சிகிச்சை எடுத்துவருகின்றனர்.
இதில் அதிகப்பட்சமாக கேரளத்தில் 5 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர். அடுத்த அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (5,089) மற்றும் கர்நாடகா (1,844) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதற்கிடையில் வியாழக்கிழமை (மார்ச் 24) தகவலின்படி 2,531 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு 67 ஆக பதிவாகியிருந்தது. ஆக ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 16 ஆயிரத்து 672 ஆக உள்ளது.
இதுவரை சிகிச்சைக்கு பின்னர் 4 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரத்து 588 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் தினந்தோறும் கரோனா பரவல் விகிதம் 0.29 சதவீதம் ஆகவும், வாராந்திர பரவல் 0.35 சதவீதம் ஆகவும் காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 954 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஆக இதுவரை 78.49 கோடி பேர் கரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தியுள்ளனர். இதற்கு மத்தியில் 12-14 வயதுடைய இளைஞர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் மார்ச் 16ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கரோனா பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. எனினும் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம் - மத்திய அரசு