டெல்லி :பிரதமர் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் நாளை (ஜூலை. 26) தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி(INDIA) திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணி மக்களவையில் நாளை (ஜூலை. 26) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக வரைவு நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு, 50 எம்.பி.க்களின் கையொப்பம் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (ஜூலை. 26) காலை 10 மணிக்கு மக்களவை சபாநாயகர் முன்னிலையில் நம்பிக்கையில்லான தீர்மான நோட்டீசை எதிர்க்கட்சிகள் குழு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று (ஜூலை. 25) காலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் எம்.பி.க்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வைப்பது தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். 50 எம்.பி.களின் கையெழுத்துடன் கூடிய நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுத்தால், பிரதமர் பேச வேண்டும் என்று கூட்டத்தில் விவாதித்தாகவும் நாளை (ஜூலை. 26) காலை 10 மணிக்கு நோட்டீஸ் தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூட்டண்யின் தலைவர்கள் கூறினர்.